குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'கை கொடுத்துக்கிட்டே இருங்க...!

'உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்'
என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன்
பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக
இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச்
சொல்லுங்கள்.

முக்கியமாக, தம் பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் குறை சொல்வதைத்
தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை மேதைகளாக ஆக்க முடியாவிட்டாலும்,
குடிபோதை, போதைமருந்து, புகை, சிகரெட் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு
அடிமை ஆகி விடாதவாறு பெற்றோர் கவனமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே
இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால் தான்
அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை
பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான்
அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.

'மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதுபோல் எந்த ஒரு
விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு
எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர
ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுக்களிலும் சரி உங்கள்
குழந்தைகளுக்கு அவ்வப்போது 'உற்சாக டானிக்'கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

தாய் என்பவள் அன்பு காட்டுபவராக மட்டும் இல்லாமல், அறிவூட்டுபவராகவும்
இருக்க வேண்டும். டி.வி. பார்ப்பது, தோழிகளுடன் அரட்டை போன்ற
பொழுதுபோக்குகளை கொஞ்சம் உங்கள் குழந்தைகளுக்காக தியாகம் பண்ணுங்கள்.
தாய்மையின் பெருமையை உணருங்கள்.

இயற்கை ஆணைவிட பெண்ணுக்கே அதிக பொறுப்பை கொடுத்திருக்கிறது. குடும்பத்தை
பராமரிப்பதுதான் அந்த பொறுப்பு. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம்
என்று அன்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'சொர்க்கம்'
எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் 'உன்னைப் பெற்ற தாயின் காலடியில்'
என்று சொல்கிறது ஒரு பழமொழி. அதிக தவறுகளைத் தெரிந்தும், தெரியாமலும்
செய்து விட்டு, அதற்கான பாவங்களை கழுவ கோவில், குளம் என்று செல்வதில் பயன்
ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிப் படி நேர்மையாக நடந்து
கொண்டால் போதும்.