Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இருபது நாட்கள் ஊரிற்கு போய் வந்து........................
4 posters
Page 1 of 1
இருபது நாட்கள் ஊரிற்கு போய் வந்து........................
இருபது நாட்கள் இலங்கையில் களித்து கனடா மீண்டதும் இந்தப் பதிவு.
முதலில் ஒரு Flashback -- சில வருடங்களிற்கு முன்னர்...
ஈழத்தை விட்டு விலகி 23 வருடங்கள் நகர்ந்து விட்டன. இந்தப் பயணத்திற்கு முன்னர் சமாதான காலத்தில் இருவாரம் ஊரிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து அவர்கள் அனுப்பிய வாகனத்தில் ஏறியது முதல் மீண்டும் விமான நிலையத்திற்கு அவர்கள் அனுப்பிவைத்த வாகனத்தில் வந்திறங்கும் வரை, அவர்களுடன் மட்டுமே அப்பயணத்தில் நின்றிருந்தேன். எனது சொந்த ஊரிற்குக் கூடச் செல்லவில்லை, முழவதும் அவர்களுடனேயே களிந்தது. புளியந்தோப்பை அடுத்த 'தமிமீழம் வரவேற்கிறது' தொடங்கி முகமாலை முன்னரண் வரையான பிரதேசத்திற்குள் எங்கெல்லாமோ அவர்களுடன் திரிந்தேன். அவர்களின் ஏகப்பட்ட பாத்திரங்களில் அவர்களைப் பார்த்தேன். நெஞ்சு நிமிர்த்திக் கால் மிதந்து திரிந்தது. ஒவ்வொரு மண் துகளும் உயிர்கொண்டிருந்தது. இரணைமடு தென்னிந்திய இலக்கியம் சித்தரித்த காவிரியை விஞ்சி நின்றது. எமது மக்கள் நான் வெளியேறிய போது இருந்ததிலும் பாhக்க அதிகம் அன்போடும் மெருகோடும் இருந்தார்கள். துயிலும் இல்லங்களில் அறியாதவர்களைக் காணவும் உணரவும் முடிந்தது. பண்டிதரும் வாகீசனும் மட்டுமல்ல, ஒவ்வொரு குறியீடுகள் கொண்டிருந்த ஒவ்வொரு பாசறைகள். எத்தனை முகங்கள்...
குறிப்பாக ஒரு முகம். ஆட்டி பிரிவின் மிகப்பெரும் பொறுப்பாளர். ஆட்டியினை மட்டும் அன்றி அந்தப் படையணிகளையே வேப்பங்குச்சியினால் பல்லுக்குத்துவது போல் மிகச் சாதாரணமாகக் கையாளக்கூடிய அந்த மாபெரும் ஆழுமை. விடுப்புப் பாக்கப்போன என்னைப் போன்ற கொஞ்ச வெறும் பயல்களிற்கு, ஒரு மாலைப் பொழுதில், அந்த உபகரணத்தையும் அது சண்டைகளில் எவ்வாறு நகர்த்தப்படும் என்றும் விளக்கிக் காட்டும் படி அந்த மனிதரிடம் கூறப்பட்ட போது, இயல்பில் வெக்கறையான அவரின் குழந்தைத் தனம் மனதில் பதிந்தது. புதிய மனிதர்கள் முன் கதைக்க முடியாது அவரிற்கு நாக்கு ஒட்டி வியர்த்து. அம்மாவின் பின்னால் ஒளியும் ஒரு குழந்தை போல் ஆகிப்போனார். உயரம் குறைவான அவர், பேசமுடியாத பதற்றத்தில் எங்களின் மூக்குவரை அண்மித்து வந்து பேசமுடியாது அண்ணாந்து நின்ற படி, ஆட்டியினை 'இவர்' என்று மட்டும் திருப்பத்திருப்பக் குறிப்பிட்டமை நெகிழச்செய்தது. அந்த மாபெரும் வீரன் என்றைக்கும் மனதில் மறையாதபடி பதிந்தது போல் ஏராளம் பதிவுகள் உள்ளேறிய பயணம் அது. பாண்டியனும் சேரனும் உண்பதெல்லாம் அமுதம் என்றுணர்த்திய படி துரை அண்ணையின் சமையலோடு போட்டிபோட்ட பயணம் அது. அந்தப் பயணத்தில், ஊரில் நடந்தேன் என்பதைக் காட்டிலும் மிதந்தேன் என்று தான் சொல்லவேண்டிய வகையில் கட்டுப்படுத்தமுடியாத ஒரு பெருமை உள்ளுரப் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
அந்தப் பயணம் முடிகையில், கனடா சென்று துரிதமாய் சில விடயங்களை முடித்துக் கொண்டு ஊரிற்கு நிரந்தரமாய் மீளவேண்டும் என்று முடிவெடுத்து விமானம் ஏறினேன். இங்கு வந்த பின்னரும் தேனிசைச் செல்லப்பா தமிழீழம் கிடைத்த நாளைப் விபரித்துப் பாடிய பாடல் தேயும்வரை திருப்பத்திருப்ப வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்தப் பயணம்.
சாரதி
எத்தனையோ தடவை பகுத்தறிவிற்குக் கட்டுப்பட்டு நிற்பாட்டிய பிரயாணம். இறுதியில், இம்முறை போவதென்று முடிவெடுத்த பின்னர், குறைந்தபட்சம் சில விசாரணைக் கேள்விகளைத் தன்னும் கட்டுநாயக்கா குடிவரவுப் பகுதியில் எதிர்கொள்ள நேரிடும் என்று பதற்றத்துடன் இருந்தேன். விமானத்தில் இருந்து இறங்கியபோது, இற்றைக்கு 23 ஆண்டுகளின் முன்னர் கனடாவில் அகதியாக இறங்கிய போதிருந்த மனநிலையில், முளங்கால்கள் பக்கிள் அடிக்க, கண்களை நேராக மட்டும் பார்த்தபடி நடந்து போனேன். ஆனால் குடிவரவு மேசையில் எனது முறை வந்தபோது, ஏன் வருகிறாய் என்ற கேள்வி கூட அங்கிருக்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கிய இருபது நிமிடத்திற்குள் பொதிகளையும் சேகரித்து வெளிவந்துவிட முடிந்தது.
கொழும்பில் ஒரு நாள் நின்று விட்டு யாழ் செல்ல வாடகைக்கு அமர்த்திய வாகனச்சாரதி 'கிளிநொச்சி சிங்கப்பூர் மாதிரி இருக்கும் பாருங்கோ' என்று ஏகப்பட்ட பில்டப் தந்தார். கிளிநொச்சி நிச்சயம் எனக்குச் சிங்கப்பூராகத் தெரியப்போவதில்லை என்பதை அவரிற்குச் சொல்லத் தோன்றவில்லை. மிகவும் வயது குறைந்த அந்தச் சாரதியிடம் எங்கள் இனத்தவன் அவன் என்ற பரிவு எழுந்தது. தம்பி ோன்று ஒரு உணர்வு. மிகச் சாதாரணமாக ஏகப்பட்டதைப் பேசிக்கொண்டு போனோம். அந்த சில மணிநேர பயணத்துள் அவனிற்கு வந்த தொலைபேசி அழைப்புக்களில் எல்லாம், 'வெளிநாட்டுக் காரரை ஏற்றிக் கொண்டுபோகிறேன்' என்றே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். கரைந்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் சகஜமான உரையாடல் வழியாக அவனுடன் எனக்கு ஒரு அன்னியோனியத்தை உருவாக்கியதாக நானுணர்ந்த போதும், அவனைப் பொறுத்தவரை நான் ஒரு வெளிநாட்டுக் காரன் மட்மே. தெருவோரமாய் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வெள்ளைக் காரனிற்கும் எனக்கும் இடையே அந்தச் சாரதித் தம்பி கண்ட ஓரே வித்தியாசம் எனக்குத் தமிழ் கதைக்கத் தெரியும் என்பது மட்டுமே. அதுவும் ஈழத்தில் நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் அவனும் வளர்ந்திருந்தான். ஆனால் அவனைப் பொறுத்தவரை நான் ஒரு தமிழ் தெரிந்த வெளிநாட்டுக் காரன். ஏதோ ஒரு நெருடல் உள்ளுர உணரப்பட்டது. இதைப் பற்றி பின்னரும் சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.
தமிழீழம் வரவேற்கிறது
புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பாதையோரத்தில் எங்கெல்லாம் எம்மைப் புல்லரிக்க வைத்த விடயங்கள் முன்னர் இருந்தனவோ அங்கெல்லாம் இப்போ நாம் தோற்றுப் போனதை முகத்தில் அறைந்து சொல்லும் சித்தரிப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன. இறந்த சிங்கள இராணுவத்தினரின் கட்டவுட்டுக்கள் அங்கங்கே அவர்களின் இராணுவ தரத்துடன் நமிர்ந்து நிற்கின்றன. மகிந்தரை வாழ்த்தும் செந்தமிழ் கவிதைகள், ஸ்த்தூபிகள் என அங்கு நாங்கள் இருந்தோம் என்பதே தெரியாதபடி அந்தச் சித்திரத்தை அவர்கள் முற்றாக அழித்து எழுதியிருக்கிறார்கள். எங்கள் காலம் என்று ஒன்றிருந்ததற்கான ஆதாரம் எதுவும் அங்கில்லை. கண்கள் நப்பாசையில் பாண்டியனையும் சேரனையும் கட்டுமானங்களையும் வரியுடைகளையும் காவற்துறையினையும் தேடத்தான் செய்தன. பண்டிதர் ஒழுங்கையோரம் கண் போகத் தான் செய்தது.
புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பயணம் எந்த உரையாடலும் இன்றி நிகழ்ந்தது. வாகனத்தின் சத்தம் பின்னணியில் இருக்க எனது மனம் ஆளவந்தான் திரைப்படத்தில் கமலகாசன் கண்ட காட்டூண்களாக் குளம்பிக் கிடந்தது. நான் அறிந்திருந்த, இப்போது இல்லாத முகங்கள் அந்தரத்தில் தொங்கிக் கதைத்துக் கொண்டிருந்தன. நான் கண்ட இப்போது இல்லாத எங்கள் படையணிகள் இலக்கின்றி வியூகத்தில் நகர்ந்த படி என்னைப் பார்த்துச் சிரித்த முகங்களாய்க் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. எனது சனங்கள் ஊர்விட்டு ஊர் பொதிகளுடன் ஏதிலிகளாக நடந்துகொண்டிருந்ததும் சிதறிக்கிடந்ததுமான காட்சிகள், ற்றான்சிசன் சீன்களாக, எரிந்த மண்ணையும் வியூகத்தில் நகரும் படையணிகளையும் அந்தரத்தில் தொங்கும் முகங்களையும் மாற்றிமாற்றிக் காட்டுவதற்காக வந்து போய்க்கொண்டிருந்தன.
அங்கங்கே எழுந்து நின்ற திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புச் சின்னங்கள் கண்ணில் பட்டபோதெல்லம் நிஜத்தில் யாரோ எனது நெஞ்சில் குத்தியதுபோல பௌதீகமாக என்னால் நோவினை உணர முடிந்தது. நத்தார் மரத்தில் பூட்டிய சோடனைகள் போல் தொங்கிக் கொண்டிருந்த முகங்கள் எமது வாகனத்தின் மீது என் மனத்திரையில் தொடர்ந்தன. வலி வலுப்பெற்றுக்கொண்டிருந்தது.
சாரதிக்கு வந்த தொலைபேசியில் அவன் 'வெளிநாடடுக்காரரை ஏத்திப் போய்கொண்டிருக்கிறேன்' என்று மீண்டுமொருமுறை ஆருக்கோ சொன்னபோது சுயநினைவு மீண்டது.
ஊரில் ஒருவருடன் இது பற்றிப் பேசியபோது அவர் கூறினார். முதற்தரம் அப்பிடித்தான் எனக்கும் இருந்தது. எல்லோரிற்கும இருக்கும். பிறகு பழகிரும் என்று.
முறுகண்டி
முறுகண்டியில் வாகனம் நின்றதும் நலிந்த உடல் கொண்ட தமிழர் ஒருவர் அண்மித்தார். தான் போரில் பாதிப்புற்றதாயும் உதவுமாறும் கேட்டார். வாழ்வேமாயம் கமலகாசன் றேஞ்சிற்கு இருமிக்காட்டினார். சுhரதி கண்ணைக் காட்டி அழைத்து அவர் ஒரு வழமையான குடிகாரர், இப்போதும் பையிற்குள் சிறுபோத்தலோடு வெறியில் தான் நிற்கிறார், என்றார். அவரிற்கு வெறியோ இல்லையோ, அவர் பாதிக்கப்பட்ட மனிதர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெரிந்தது. ஆனால் சாரதி என்னோடு கதைப்பதைக் கண்ட அவர் தனது குட்டு வெளிப்பட்டதாய் நினைத்து நான் திரும்பும் முன்னர் அப்பால் சென்று விட்டார். அவரது உருவம் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை குடிக்கு அடிமைத்தனம் என்பது ஒரு நோய் தான். அந்த நோய் வருவதற்கும் நிலைப்பதற்கும் ஏகப்பட்ட பின்னணிக்க காரணிகள் உள்ளன.
ஊரில் நின்றுவிட்டு ஊரை விட்டு வருகையில் முறுகண்டியில் வேறு ஒருவர் வந்து மேற்படி அதே ஸ்க்கிறிப்ற்றைச் சொன்னபோது, முன்னைய உறுத்தல் நீங்க அவரிடம் கையில் இருந்த ஐந்நூறு ரூபாய்த் தாழைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அவர் தொடர்ந்து தனது ஸ்க்றிப்ற் பிரகாரம் பேசிக்கொண்டிருந்தார்.
இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களை வெளிநாட்டுக்காரர் என இலகுவில் அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.
விருந்தோம்பல்
ஊரிற்குப் போன உணர்வினை ஒருவன் தந்தான். தடுப்பில் இருந்து மீண்டிருக்கும் ஒரு போராளியிடம் தான் அந்த உணர்வை முதன்முதலில் உணர முடிந்தது. அவனிற்கு ஏகப்பட்ட பணப்பிரச்சினை. நான் போனவுடன் தேத்தண்ணி போடத் தேவையான சாமான் வாங்க கடைக்கு வெளிக்கிட்டான். எவ்வளவோ தடுத்தும் கேட்காது கடைக்கு அவன் வெளிக்கிட, சரி நானும் வருகிறேன் எனக் கூடிச் சென்றேன். கடையில் நான் கடைக்காரிடம் பில்லிற்கான தொகையினைக் கொடுக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன். அடம்பிடித்துத் தடுத்தவன் இறுதியில் வெகுண்டுபோய் சொன்னான், 'அண்ணை, என்னை நீங்கள் தேத்தண்ணி கூடத் தரமுடியாதவன் என்று பாக்கிறியள் என்ன' என்று. எனது கண்கள் சுரந்ததை என்னால் அடக்கமுடியவில்லை.
வெளிநாட்டில் இருந்து போகும் எவரும் விருந்து வேண்டி அங்கு போவதில்லை. தடுப்பில் இருந்து வந்தவன் தந்த தேத்தண்ணியினை மிஞ்சும் விருந்தினை எந்தக் கொம்பனாலும் எத்தனை லட்சம் செலவளித்தும் தர முடியாது. ஆனால் அங்கிருப்பவர்களிற்கு இப்போது புலம் பெயர்ந்தவர்கள் 'வெளிநாட்டுக் காரார்கள்'. செஞ்சிலுவைச் சங்கம் போன்று ஒரு கட்டமைப்பினர். நிவாரணம் தருபவர்கள். பெரும்பாலும் அவ்வளவு தான்.
வைத்தியர் ஒருவர்
பல்வேறு காரணங்களால் உளவியல் பாதிப்பிற்குள்ளாகி—பொதுமைக்காகப் பேரிழப்பைச் சம்பாதித்த அர்ப்பணிப்பு மிக்க குடும்பப் பின்னணி--அதனால் குடிக்கு அடிமைப்பட்டுப்போன ஒரு இளைஞன். அங்கு இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடி தொலைபேசி அழைப்பின் மூலம் கடனிற்குச் சாராயமோ கசிப்போ பலரிற்குப் பெற முடிகிறதாம். ஆதனால் குடிக்கு அடிமையாதல் இலகுவாக இருக்கிறது. புலத்தில் எந்தப் பதார்த்தத்திற்கும் அடிமைப் படல் ஒரு நோயாகவே பார்க்கப் படுகிறது. ஆனால் ஊரில் குடிகாரனைத் திட்டும் மனநிலை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது. பொதுமக்கள் அவ்வாறு நடந்து கொள்வது எதிர்பார்க்கக்கூடியது, ஆனால் உளவியல் வைத்தியரே பொறுப்பற்றுப் பேசின்?
மேற்படி இளைஞனின் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த இளைஞன் சுயநினைவின்றி இருந்தான். இந்நிலையில் அந்த இளைஞனைப் பார்த்துவிட்டு சும்மா வரமுடியவில்லை. அவன் நினைவு பெறும்வரை காத்திருந்து அவனுடன் இயன்றவரை உரையாடி வைத்தியரிடம் வருவதற்கு அவனைச் சம்மதிக்க வைத்து மறு நாள் ஒரு உளவியல் வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். அந்த இளைஞன் முன்னரும் அந்த வைத்தியரிடம் சென்றிருந்தமையால் அது சாத்தியப்பட்டது.
யாழ்ப்பாண ஆஸ்ப்பத்திரியில் வைத்தியர்கள் என்பவர்கள் பயப்படவேண்டியவர்களாகக் கொம்பு முளைத்தவர்களாக நடந்து கொள்கிறார்கள். தாதிகள் முதற்கொண்டு அத்தனை ஊழியர்களும் சேர் சேர் என்று வைத்தியரைப் பயந்து நடுங்கி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ வைத்தியர் முழுங்கிவிடுவார் போன்று அந்த ஊழியர்கள் நடுங்குகிறார்கள். இது ஊழியரின் நிலை என்றால் நோயாளிகள் நிலை சொல்லத் தேவையில்லை.
வைத்தியரைப் பார்க்கும் முறை வந்ததும் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். நாங்கள் இருந்ததும் வைத்தியர் கூறிய முதல் வாசகம் 'இவைக்கு ஆட்டம்' என்பதாக இருந்தது. உளவியல் வைத்தியரின் சம்பாசனை இவ்வாறு ஆரம்பிக்கும் என்று நான் எதிர்பார்க்காததால் சற்றுச் சுதாகரித்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் பின்னர் இயலுமான நிதானத்தோடு விளங்கவில்லை என்றேன். வைத்தியர் சொன்னார், 'ஆட்டம் என்பது தமிழில் ஒரு சரியான vulgarறான பதம். அதைத் தான் இவர்களை நோக்கிப் பிரயோகித்தேன்' என்று. எனக்குள் கோவம் பிரவாகிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தக் கட்டத்தில் எனது தேவை அந்த இளைஞனிற்கான மருத்துவ சேவையினைப் பெறுவது மட்டுமே. மேலும் நான் அங்கு நிற்கும் சொற்ப நேரத்தில் வேறு வைத்தியரைக் கண்டு பிடிப்பதோ, சந்திப்பிற்கான நேரம் பெறுவதோ சாத்தியமில்லை. மேலும் மற்றைய வைத்தியர்களும் ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இவரைப் போலவே இருப்பதற்கான சாத்தியம் அதிகம். கோபத்தைக் கட்டுப்படுத்தி சொல்லவேண்டியதைக் காத்திரமாக ஆனால் நிதானம் தப்பாது சொல்வதற்கு எனக்குத் தோன்றிய ஒரே உத்தி எங்கள் உரையாடலை ஆங்கிலத்தில் நிழத்துவது என்பதாக இருந்தது. எனவே எனது மூச்சைக் சீர்ப்படுத்திக் கொண்டு, அந்த இளைஞனோடு முன்னைய நாள் இரவில் நான் கதைத்தவற்றின் சாராம்சத்தையும் அவன் எனக்குக் கூறியவற்றையும் ஆங்கிலத்தில் வைத்தியரிடம் கூறினேன். அவனது சரித்திரம் தனக்குத் தெரியும் நான் சொல்லத் தேவையில்லை என்பது போல் வைத்தியர் ஆரம்பித்தாலும் சில நொடிகளில் அவரது நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது. தனது கோபத்தின் காரணம் அந்த இளைஞனோ அவனது குடும்பத்தவரோ ஒழுங்காகத் தொடர்ந்து தன்னிடம் வருவதில்லை என்று வைத்தியர் சொன்னார். ஆங்கிலத்தில் உரையாடல் நகர்கையில் முன்னைய சொறித்தனம் மாறி வைத்தியரும் நாகரிகத்துடன் பேசமுனைந்தார். அந்த இளைஞனை வாட்டில் அனுமதித்துத் திரும்பினேன்.
ஊரில் வைத்தியர் மட்டுமல்ல அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை பணியாளர்கள் கதைக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். காட்டுமிராண்டித் தனமான கத்தல்கள் தான் அவர்களிற்குத் தெரிகிறது. இதற்கு முதற்காரணம் துறைசார் விடயங்களை தொழில் சார் நிபுணர்கள் பொதுமக்களிடம் மறைத்து வைக்கிறார்கள். தமது துறைசார் அறிவை அஸ்த்திரமாகப் பிரயோகிக்கிறார்கள். ஒரு மெக்கானிக் ஒன்றைத் திருத்தும்போது தான் திருத்திய பிழையினை விபரிக்க மறுக்கிறார் 'திருத்தியாச்சு, இனிப் பிரச்சினை தராது, தந்தால் கொண்டு வாங்கோ' என்று மட்டும் தான் கூறுகிறார். இதுபோல் தான் வைத்தியர் முதற்கொண்டு அங்கு அனைவரும் இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகள் தேசமாகக், கத்துவதற்கு மட்டுமே கற்று வைத்திருக்கிறார்கள். உரையாடத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பொது மக்களும் தலையைச் சொறிந்தபடி குனிந்து நின்று சேவைபெற்றுக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள், ஏனெனில் அவர்களிற்குத் தெரியும் ஒரு இடத்தில் தாம் கத்து வாங்கினாலும் தாமும் கத்துவதற்கான சந்தர்ப்பம் தம்மிடம் உள்ளதென்று.
முதலில் மேற்படி வைத்தியரைப் படம் எடுத்து அவரது பெயருடன் இவ்விடயம் பற்றி விரிவாக நடவடிக்கை எடுக்கத் தான் நினைத்தேன். ஆனால் பின்னர் புரிந்தது அங்குள்ள பணியாளர்கள் அனைவருமே அப்படித் தான் இருக்கிறார்கள். அந்தக் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் தான் அவர்களது தொழிற்கலாச்சாரம். அந்த வைத்தியர் அந்தக் கலாச்சாரத்திற்குள் ஒருவர். அவ்வளவு தான். அந்தக் கலாச்சாரத்தில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் கனடாவில் வாழ்வதற்காக உள்ளுர நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
தலைமைத்துவ வெற்றிடம்
அரசியலலை விட்டுவிடுவோம். சமூகத்தின் அன்றாட இயக்கம் என்பது மாலுமித் தலைவன் இல்லாத கப்பல் போல் அங்கு சென்று கொண்டிருக்கிறது. புலிகள் ஏகப்பட்ட கட்டமைப்புக்களை வைத்திருந்தார்கள். புலிகளிற்குப் பின் சமூகம் சார்ந்து கற்பனையுடனும் பெட்டிக்கு வெளியேயும் சிந்தித்துச் செயற்படும் தலைமைத்துவம் அங்கு மறைந்து போயுள்ளது. அவரவர் தத்தமது விடயங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கிறார்கள். ஊரிற்குள் கோயில் சார்ந்தும் இதர பொதுமைகள் சார்ந்தும் கன்னைகட்டி கட்டிப்புரண்டு சண்டை செய்கிறார்கள். அதிகாரத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தத்தமது மட்டத்தில் தமக்குத் தெரிந்த வகைகளில் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் தமக்காக மட்டும் தான் பிரயோகிக்கிறார்களே அன்றி சமூகம் என்ற சிந்தனை அங்கு அறவே இல்லை. இன்னமும் சொல்வதானால் அணைவுகள் அங்கு அஸ்த்திரங்களாக மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றன.
தமிழர் தேசியக்கூட்டமைப்பு அல்ல எந்த தற்போதைய தலைமைகளும் (அது கிராம மட்டமாகினும் மாகாண மட்டமாகினும்) கற்பனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். சமூக இயந்திரம் ஏதோ தொழிற்படுகிறது.
பிரச்சினைகள்
யாருடன் கதைதாலும் நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஓயாது கதைக்கிறார்களே தவிர எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் புதிய தீர்வையும் அவர்கள் கண்டடைய முனைவதாகத் தெரியவில்லை. வயலில் அரிவி வெட்டும் இயந்திரம் முதலாக அங்கங்கங்கே தொழில் நுட்பங்கள் பாவiனியில் உள்ளபோதும் பெரும்பாலும் பழைய வழிகளிற் தான் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரில் இப்போது எல்லாம் கூலிக்கு ஆட்கள் பிடிப்பது மிகக் கடினம். இதை நேரடியாக ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடிந்தது. ஒரு கூலியாளிற்கு நாளிற்கு 1000 ரூபாய் ஊதியமும், ஒரு நேர மீன் சாப்பாடும், மூன்று தேனீரும், மிக்ஷர் புகையிலை வெற்றிலை முதலியனவும் கொடுத்தால் தான் வருகிறார்கள். அப்போதும் ஒரு நாளினை ஓட்டுவதில் தான் குறியாக இருக்கிறார்களே அன்றி வேலையினைப் பொறுப்பெடுத்து முடிக்கும் மனநிலை வேலையாட்களிற்கு இல்லை. நேரம் என்பது அங்கு ஒரு பொருட்டே இல்லை. இது பற்றி அங்குள்ளவர்களுடன் கதைத்தபோது இது பற்றி அவர்களும் ஏகப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர், ஆனால் அனைவரும் பிரச்சினைகள் பற்றித் தான் பேசுகின்றார்கள் அன்றி எவரும் தீர்வு பற்றிச் சிந்திப்பதாய் இல்லை.
கூலிக்கு வேலை செய்யும் ஒருவரிடம் ஒருநாள் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்போது இதுபற்றிக் கதைக்கையில் நான் அறிந்து கொண்டது என்னவெனில், கூலி வேலை என்பது அப்பப்போ தான் வருகிறது. அதில் வரும் ஊதியம் சேர்த்துவைப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதனால் கூலி வேலை செய்யும் அனைவரும் வாழ்வினைக் கொண்டுசெல்லப் பல தொழில்கள் செய்கிறார்கள். உதாரணமாக நான் கதைத்த மனிதர் காலையில் சீவல் தொழில் முடித்துத் தான் கூலி வேலைக்கு வருவாராம். அத்தோடு மரம் வெட்டும் வேலைக்கும் போவாரம். கூலி வேலைக்கு யாரிடமேனும் வருவதாகத் தான் ஒத்துக் கொண்டாலும் திடீரென மரம் வெட்டும் வேலை வரின் தான் அங்கு சென்று விடுவாராம் ஏனெனில் அதில் வருமானம் அதிகமாம்.
மேற்படி விபரத்தைக் கேட்கையில் இந்தப் பிரச்சினை பின்வருமாறு தான் எனக்குப் புரிந்தது. அதாவது. கூலியாட்களிற்கு வருமான உத்தரவாதம் தான் பிரச்சினையாக இருக்கிறது. கூலிக்கு ஆட்கள் தேடுபவர்களிற்கு நிர்ணயிககப்பட்ட விலையில் குறித்த நேரத்தில் வேலை முடிப்பதற்கு ஆட்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால் கூலியாட்கள் எந்தவொரு நிறுவனமாகவோ கட்டமைப்பாகவோ இயங்கவில்லை. மேலும், இன்றையத் தேதிக்கு உள்ள தொழில் நுட்பங்கள் பெரிதாக அங்கு பாவனையில் இல்லை. மரத்தைக் கோடரியால் தால் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள், வேலிக்குக் கம்பிக்கட்டை கோடரியால் தான் தறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் வேலி அடைக்கையில் அலவாங்கால் தோண்டி சிரட்டையால் தான் மண் அள்ளுகிறார்கள்.
பிரச்சினையினையும் தேவையினையும் பார்க்கையில் தீர்வு மிக இலகுவானதாக இருந்தது. அங்குள்ள ஒரு பெருங்காணிக்காரரிடம்--அவர் பல லட்சங்களைக் காணி வேலைகளிற்காகத் தொடர்ந்து செலவளித்துக்கொண்டிருப்பவர். அத்தோடு ஓயாது தினமும் கூலியாட்கள் பிடிப்பதில் உள்ள தலையிடி பற்றி நொந்து பேசிக்கொண்டிருப்பவர்--மேற்படி பிரச்சினையினை உடடினடியாகத் தீர்கக்கூடிய, முதல் நாளில் இருந்து பணம் ஈட்டக்கூடிய ஒரு வியாபாரத் திட்டத்தை விளக்கமாகக் கூறினேன். ஆனால் அதை அவர் நடைமுறைப்படுத்துவார் என்று தோன்றவில்லை. அனைத்துப் பிரச்சினைகளும் அவ்வாறே தொடரும் என்றே தோன்றுகிறது.
சிறு முதலீடுகளுடன் (15 ஆயிரம் டொலர்கள் அளவில்) மேற்படி கூலியாட்கள் பிரச்சினை தொட்டு ஏகப்பட்ட பிரச்சினைகள் அங்கு தீர்க்கப்படக்கூடியன. அவை பிரச்சினை என்பதைக் காட்டிலும் வியாபார சந்தர்ப்பங்கள். அரசியல் முதலான பிரச்சினைகளைச் சந்திக்காது, றாடாரிற்குக் கீழாக இயங்கக்கூடிய முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் இவை. ஆனால் வெளிநாட்டில் இருந்தபடி அவற்றைச் செய்யமுடியாது. அங்கிருப்பவர்களிற்கோ கற்பனை போதவில்லை.
நான் பார்த்தவரையில் மக்களின் சிந்தனை விரியவில்லை. பல கட்டுப்பட்டித் தனங்களும் காலதிகாலமான தழைகளும் அப்படியே இருக்கின்றன. எந்தப் பிரச்சினையினையும் தீர்ப்பதற்கு வரையறுக்கப்பட்டவர்களைத் தான் பார்க்கிறார்களே அன்றித் தம்மால் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்ற சிந்தனையினை அங்கு அறவே காணமுடியவில்லை.
சாதி
நான் நின்ற வீட்டின் குடும்பத்தாரிற்குப் பாரம்பரியமாகச் சாதி சார் தொழில்கள் புரிந்து வரும் பலரும் அவர்களது சந்ததியினரும் வெளிநாட்டுக் காரரைப் பார்க்க வந்தார்கள். 23 வருடங்களின் முன்னர் நான் பார்த்த நடைமுறைகள் சற்றும் மாறாது அப்படியே இருந்தன. ஒரு வயதான சலவைத்தொழிலாளி. அவர் வந்து வெளியில் நிலத்தில் அமர்ந்தார். அப்போது கதிரையில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுச் சிறுவன், எழுந்து தன் கதிரையினைத் தூக்கிச் சென்று அவர் அருகில் போட்டு, தனக்குத் தெரிந்த கொன்னைத் தமிழில் 'இந்தாங்கோ இருங்கோ' என்று சொன்னான். வீட்டுக்காரர் முகம் இறுகி இருந்தது. அந்த முதியவர் 'ஐயா கதிரை போடுது' என்று சிரித்துச் சமாளித்து விட்டு, எழுந்து சென்று வேலியோரமாகத் தனது வெற்றிலையினைத் துப்பி விட்டு மீண்டும் வந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். கதிரை காலியாகவே இருந்தது.
லீசிங்
வாகனங்கள் வீடுதோறும் நிற்கின்றன. எல்லோரும் லீசிற்குத் தான் வாகனம் எடுக்கிறார்களாம். ஒரு காலத்தில் சேமிப்பு மற்றும் வட்டிவீதம் முதலிய விடயங்களில் அடிப்படை அறிவினை இயல்பாகக் கொண்டிருந்த எமது மக்கள் இன்று வெற்றிகரமாக குருட்டு நுகர்வோர் ஆக்கப்பட்டுள்ளார்கள். சிந்திக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தாயும் தந்தையும் அன்றாடச் செலவிற்கு அல்லாடும் குடும்பங்களிலும் குழந்தைகள் கைப்பேசியினை புதிய மொடல்களிற்குக் கடன்பட்டு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுத்தொகை கட்டமுடியாது போய் பறிமுதலாகும் சொத்துக்கள் சார்ந்து தற்கொலைகள் தினம் நிகழ்கின்றன. பத்திரிகைகள் சொல்கின்றன.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள்
சக்தி, வசந்தம் முதலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரைகைகளைப் பார்த்தபோது புலத்தில் இருக்கும் சிந்தனை வங்குறோத்தான தமிழ் ஊடகங்கள் போலத் தான் அவையும் இருக்கின்றன. இளம் பெண்களையும் ஆண்களையும் கவர்ச்சியாகக் கதைக்க வைத்துப் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தான் நிகழ்கின்றனவே அன்றி சிந்தனை என்பது மருந்திற்கும் காணவில்லை. பத்திரிகைகளில் காலதிகாலமாக இருந்து வந்த நொண்டிக் கவிதைகளும் நொடிகளும் கட்டுரைகளும் மட்டமாகவே தொடர்கின்றன.
ஞாபக வீதி
எல்லோரையும் போல, 23 வருடங்களின் பின்னர் நான் பிறந்து வழர்ந்த ஊரிற்குச் செல்கையில் அங்கு ஞாபக வீதியில் பயணிப்பதும் இழந்தவற்றை மீள வாழ்வதும் தான் எனதும் முதற்குறியாக இருந்தது. பிரிந்தபின் ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பதை அறிவு அறிந்திருந்தபோதும் ஆசை அடம் பிடித்தது.
கொத்துரொட்டியில் ஆரம்பித்தேன். கனடாவில் தமிழர்களுடன் கொத்துரொட்டி உண்ணும் போதெல்லாம் நானும் அவர்களும் சொல்வது ஊரில் இருந்த கொத்துரொட்டிக்கு இதெல்லாம் கிட்டவருமா என்பது தான். கொத்து ரொட்டி என்பது வாழை இலையில் சுற்றப்பட்டு பத்திரிகைத் தாழில் வெளியே பொதிசெய்யப்பட்டதாகவே எனது மனதில் இருந்தது. ரொட்டி பேபர் போல மெல்லிதாக மனதில் இருந்தது. ஆனால் ஊரிலும் கொழும்பிலும் இம்முறை கொத்துரொட்டி உண்டபோது, கனடாக் கொத்துரொட்டி தான் நான் முன்னர் இரசித்த கொத்துரொட்டிக்குக் கொஞ்சமேனும் கிட்ட நிற்பதாய்த் தோன்றியது. கனடாவின் கொத்துரொட்டி றெசிப்பி நான் புலம்பெயர்ந்த காலத்தில் புலம் பெயர்ந்தது. அதனால் அது ஓரளவிற்கு என் ஞாபகத்தோடு ஒத்துப் போகிறது. ஊரில் இப்போது கொத்துரொட்டி வாழை இலையில் சுற்றப்படுவதில்லை. பொலித்தீனில் சுற்றப்படுகறது. நான் பிரிந்த கொத்துரொட்டியினை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கருப்பணி குடித்தேன். அது அன்று போல் இல்லை. பலாப்பழம் உண்டேன் அது வாடல் பழமாக இருந்தது. சீசன் முடிந்து விட்டது என்றார்கள். பழங்களைப் பொதுவில் இப்போதெல்லாம் பிஞ்சில் பறித்த மருந்தடித்துப் பழுக்க வைக்கிறார்களாம். அதனால் சுவையில்லை என்பது மட்டுமல்ல கலியாண வீடுகள் முதலியவற்றில் வாழைப்பழத்தை மக்கள் உண்பதில்லையாம். அவை சோடனைக்கு மட்டும் தானாம்.
ஆலங்கொழுக்கட்டையும் பனங்காய்ப் பணியாரமும் அருமையாக இருந்தன. அள்ளி அடைந்து கொண்டேன்.
பசுப்பால் குடித்தபோது முன்னைய சுவை தெரியவில்லை. ஊரில் இப்போதெல்லாம் மாடுகள் பெரும்பாலும் எருவிற்காக மட்டும் தான் வளர்க்கப்படுகின்றன. இதுபற்றிப் பேசும் போது ஒருவர் சொன்னார் 'இங்கத்தே மாடுகள் ஒரு போத்தல் கறக்கும்' என்று. பறவாயில்லைத் தானே வீட்டுத் தேவைக்கு என்றேன். அவர் சிரித்துக்கொண்டு சொன்னார் 'ஊரில் உள்ள மாடுகள் எல்லாத்தையும் கறந்தால் மொத்தமாய் ஒரு போத்தல் வரும்' என்று.
எடுத்து வளர்க்க ஆட்கள் இன்றி வன்னியிலும் தீவுப்பகுதிகளிலும் அலையும் மாடுகள் பற்றி பத்திரிகையில் செய்தி வந்திரிருந்தது. அது பற்றி பால் மா பிரச்சினை பற்றிக் கதைத்த ஒருவரிடம் கூறிய போது அவர் சொன்னார்: ' அப்பிடி நாங்கள் அவற்றை கொண்டு வந்து வளர்த்தால் மாடுகள் தேறியதும், ஓரிரு மாத்தத்தில் அவை தங்கள் மாடென்று கேஸ் போடப் பலர் வருவார்கள் என்று. பிரச்சினை விளங்கிக் கொள்ள முடிந்தது.
ஊரில் திருட்டுக்கள் அப்பப்போ நடக்கின்றன. மக்கள் பொலிசில் முறையிடுகிறார்கள். நான் செல்வதற்குச் சில நாட்கள் முன்னர் நடந்த ஒரு திருட்டினை நான் அங்கு நிற்கும் போதே பொலிஸ் திருடனைப் பிடித்து தீர்த்திருந்தது. சிங்களப் பொலிஸ் தான் அதிகம் இருக்கிறார்கள். தமிழர்கள் பிரச்சினை சார்ந்து சிங்களப் பொலிசிடம் நம்பிக்கையுடன் முறையிடுவது, ஈழத்தில் பொலிசைக் காணாது வழர்ந்த எனக்கு விந்தையாக இருந்தது.
வீதிகள் சிறுத்துப் போய்த் தெரிந்தன. கண் பழகப்பழகத் தான் ஞாபகம் சற்று மீண்டது. ஆனால் நான் பிரிந்த வீதிகளிற்கு என்னைப் பரிட்சயமில்லை எனக்கும் அவற்றை உணரமுடியவில்லை. பல்வேறு அபிவிருத்திகள் வீதிகளையும் ஒழுங்கைகளையும் உருமாற்றிவிட்டன.
நான் பிரிந்த மரங்களை ஆரத்தழுவவேண்டும் என்று ஆசையோடு சென்றேன். பல மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. மீதம் உள்ள மரங்களும் நானும் இந்த இருதசாப்த்தத்தில் பிரிந்து வளர்ந்ததால் பிணைப்பு கிடைக்கவில்லை. என் மரங்களிற்கு என்னைத் தெரியவில்லை. எனக்கும் அவற்றோடு ஒட்டவில்லை. மாமரங்களில் குருவிச்சகைள் பெரும்பான்மை ஆட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தன. பெரிய காடுகளாக எனது மனதில் பதிவாகியிருந்தவை இப்போது பற்றைகளாகத் தெரிந்தன.
எனக்குத் தெரிந்த ஊரவர்கள் ஏறத்தாள அனைவரும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அதனால் நானறிந்தவர்கள் ஊரில் இல்லை. அருமையாக ஒரு சிலரைக் கண்டபோது மகிழ்வாகத் தானிருந்தது. குளங்கள் கிணறுகள் கூட காணாமல் போயுள்ளன அல்லது வற்றிக் கிடக்கின்றன.
வல்லிபுரக்கோயில் பிரமாண்டமாக மாறிவிட்டது. சன்னதி பெரும்பான்மைக்கு அப்படியே தான் இருக்கிறது. எரிக்கப்பட்ட தேரினை நினைவூட்டி பெரிய தேர்முட்டி சிறிய தேரை உள்ளடக்கி உயர்ந்து நிற்கிறது. நல்லூர் அப்படியே இருக்கிறது. திருவிழா கோலாகலமாக நடக்கிறது. சன்னதியில் சாமி காவப்படுகையில் நிகழும் ஒலிகள் அறிவைக் கடந்து ஏற்படுத்தும் உணர்வு உடலிற்கு ஞாபகம் இருந்தது.
கோயில்களும் பள்ளிக் கூடங்களும் பிரமாண்டமான கட்டிட வளர்ச்சிகளை அடைந்துள்ளன. பள்ளிக் கூட மதில்களில் பும்பெயர் நாடுகளின் ஊர்ச்சங்கங்களின் பெயர்கள் உபயகாரராகப் பதிவாகி இருக்கின்றன. கனேடிய தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புக்களையும் காண முடிந்தது.
மொத்தத்தில் ஊரில் என்னால் ஞாபகவீதியில் அதிவேகத்தில் ஓடமுடியவில்லை. கனடாவில் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ்கடையில் கிடைக்கின்ற ஞாபகவீதி ஓட்டம் ஊரில் கிடைக்கவில்லை. ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பது தெரிந்தது தான். இலக்கியங்கள் இம்முனையில் நிறைந்து கிடக்கின்றன. எமது ஞாபகங்கள் நாம் குறித்த நேரங்களில் பிரதி எடுத்தவை தான். அந்தப் பிரதிக்கான காட்சிகளைத் திருப்பச் சென்று தேடுவது சாத்தியமற்றது, ஏனெனில் ஊரும் நாமும் பிரிந்து வழர்கிறோம். எமது அனுபவங்கள் மாறுபட்டவை. எத்தனையோ பிரமிப்புக்களையும் கிழர்ச்சிகளையும் புலப்பெயர்பில் அனுபவித்துவிட்டோம். விடயங்களை உள்வாங்கும் எமது அறிவு நாம் ஊiரைப் பிரிந்தபோது இருந்ததைக் காட்டிலும் பலதூரம் மாறிவிட்டது. ஒரே விடயத்தை அன்றைக்குப் பார்த்தது போல் இன்றைக்குப் பார்க்க முடியாது என்பது ஒரு புறம். மற

veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: இருபது நாட்கள் ஊரிற்கு போய் வந்து........................
மாலதி wrote:மீண்டும் அந்த நாட்கள் விரைவில் வரும்
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Re: இருபது நாட்கள் ஊரிற்கு போய் வந்து........................
அந்த நண்பரின் இந்த விடயங்களை படித்தவுடன்
என் மனசு கொஞ்சம் கனத்து விட்டது......
என் மனசு கொஞ்சம் கனத்து விட்டது......
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Re: இருபது நாட்கள் ஊரிற்கு போய் வந்து........................
veelratna wrote:அந்த நண்பரின் இந்த விடயங்களை படித்தவுடன்
என் மனசு கொஞ்சம் கனத்து விட்டது......
Similar topics
» 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...
» நாற்பது நாட்கள் ஆவதற்குள் அவரது பேச்சில் பொங்கி வழிந்து கொப்பளித்த வீரம் நீர்க்குமிழி போல மறைந்து போய் விட்டது. அய்யா. பழ.நெடுமாறன்,
» இருபது வருட உலக அழகிகள்
» இருபது நூற்றாண்டுகளுக்கு முன் ஓமான் நாட்டில் தமிழ்..!
» இருபது டாலர்கள் மதிப்பிலான 40 எழுத்துருக்கள் இலவசமாக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum